search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்துகொண்ட சாந்தி - லோகநாதன்
    X
    தற்கொலை செய்துகொண்ட சாந்தி - லோகநாதன்

    கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி தற்கொலை

    கணவன்-மனைவி தற்கொலை செய்வதற்கு முன்பு தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போனில் தகவல் ஒன்றையும் அனுப்பினார்கள்.
    சென்னை:

    சென்னை மந்தவெளி ஏ.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது55). இவரது மனைவி சாந்தி (49). இவர்களுக்கு குழந்தை இல்லை.

    லோகநாதன் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். மேலும் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் வேலையை இழந்தார்.

    மேலும் ஏலச்சீட்டு நடத்தியதில் பணம் கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு கடன் பிரச்சினை உருவானது.

    ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு உரிய நேரத்தில் அவரால் பணத்தை கொடுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அவருக்கு கடன் சுமை மேலும் அதிகரித்தது. எனவே மனம் உடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர். தாங்கள் இறந்தால் அந்த நாய் அனாதையாகி விடுமே என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டது.

    எனவே நாயை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர். இதற்காக நாயின் முகம் முழுவதையும் பாலிதீன் கவரால் மூடி கட்டினார்கள். நாய் மூச்சு திணறி இறந்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்களும் தற்கொலை செய்ய தயாரானார்கள்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன்பு தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போனில் தகவல் ஒன்றையும் அனுப்பினார்கள்.

    அதில், “எங்களுக்கு நிறைய கடன் பிரச்சினை இருக்கிறது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் மரணத்துக்கு பிறகு நாங்கள் இருக்கும் வீட்டை விற்று கடனை திருப்பி கொடுத்து விடுங்கள்” என்று கூறி இருந்தனர்.

    அத்துடன் யார்-யாருக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என்ற பட்டியலையும் அனுப்பி இருந்தனர். சாவிலும் அந்த தம்பதி நேர்மையை கடைபிடித்தனர்.

    இதற்கிடையே முகத்தில் பாலிதீன் கவரால் கட்டப்பட்டிருந்த நாய் கொஞ்சம் கொஞ்சமாக பாலிதீன் கவரை கடித்து கிழித்து மீண்டும் சுவாசிக்க தொடங்கி உயிர் பிழைத்தது.

    தூக்கில் தொங்கிய தம்பதியினரின் உடலை பார்த்து நாய் கத்தியபடி ஊளையிட்டது. இந்த சத்தத்தை கேட்டு நேற்று மதியம் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போதுதான் லோகநாதனும், சாந்தியும் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    தகவல் கிடைத்ததும் அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அனாதையாக தவித்த நாயை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×