search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூக்கள்
    X
    மல்லிகை பூக்கள்

    மதுரை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை தொடர்ந்து மந்தம்

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மலர் சந்தையில் பூக்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் தினமும் 25 டன் பூக்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    ஆனால் கொரோனா ஊரடங்கால் மலர் சந்தையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பூ வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

    கொரோனா முதல் அலையில் இருந்து வீழ்ச்சி அடைந்த பூக்கள் விற்பனை கொரோனா 2வது அலையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மலர் விவசாயம் பாதிக்குமேல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை எலியார் பத்தி, பாரப்பத்தி, வலையங்குளம், குசவன் குண்டு, குதிரைக்குத்தி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் 15 டன்களுக்கு குறையாமல் மல்லிகை பூக்கள் சந்தைக்கு வரும். ஆனால் தற்போது போதிய விலை இல்லாததாலும், செடிகளை பராமரிக்காததாலும் பூக்கள் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

    மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் இன்று 5 டன் மலர்களே விற்பனைக்கு வந்தன. சீசன் காலங்களில் மதுரை மல்லிகை கிலோ 3,000 ரூபாய் வரை விலை உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கும். ஆனால் இன்று கிலோ ரூ. 200 ரூபாய்க்கு விற்பனை செய்தும் பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பங்கி ரூ.30 க்கும், அரளி ரூ.100, செவ்வந்தி, கொழுந்து உள்ளிட்ட மலர்கள் ரூ. 50க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும் மக்களிடம் ஆர்வம் இல்லாததால் மலர் சந்தையில் பூக்கள் தேங்கிக் கிடந்தன.

    இது தொடர்பாக மலர் வணிகர் சங்க தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:

    கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மலர் விவசாயிகள் வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    தற்போது போதிய விலை கிடைக்காததால் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பூ பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இதனால் செடிகளிலே பூக்களை வாட விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    கோவில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் அதிகளவில் பூக்கள் விற்பனையாகும். ஆனால் தற்போது கோவில்கள் மூடப்பட்டுள்ளன. திருவிழாக்கள் நடைபெறவில்லை. சுபகாரியங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் பூக்கள் விலை தொடர்ந்து மந்தமாகவே உள்ளது.

    இதனால் விவசாயிகள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனிக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்
    Next Story
    ×