search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை காணலாம்.
    X
    குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை காணலாம்.

    குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்- குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?

    தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ளதால், அரசு தளர்வு அளித்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
    தென்காசி:

    தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும்.

    இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தற்போது கடந்த 2 நாட்களாக வெயில் அடித்தது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டும் இதே போன்று சீசன் காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது 2-வது ஆண்டாக இந்த நிலை நீடிக்கிறது.

    கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட போது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கி அரசு அனுமதி அளித்தது. இதனால் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் அப்போது சீசன் இல்லாததால் பெரும்பாலானோர் குற்றாலத்திற்கு வரவில்லை. வெளியூர்களைச் சேர்ந்த ஒரு சிலர் மற்றும் உள்ளூர்வாசிகள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் குற்றாலம் அருவிகளில் குளித்தனர்.

    இந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ளதால், அரசு தளர்வு அளித்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். மேலும் இங்குள்ள கடைகளையும் திறந்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி செயல்பட உத்தரவிட வேண்டும் என்று வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×