search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்
    X
    கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்

    மலைகிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    மலைகிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் 205 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் தொடக்க விழாவுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். விஜயதரணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நோய் தொற்று அதிகரிப்பதாலும், பொதுமக்களின் ஏழ்மை நிலையினை மனதில் கொண்டும், குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைத்து நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் 205 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை மற்றும் தச்சமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் 2 தன்னார்வ அமைப்புகள் வாயிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் சுய மருத்துவம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் அருகே உள்ள சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்துக்கு வெளி நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதோடு தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாதவன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) கிருஷ்ணலீலா, ஐ.ஆர்.இ.எல். (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் செல்வராஜன், கல்லூரி முதல்வர் பால்ராஜ், தாளாளர் ராஜதுரை, விளவங்கோடு தாசில்தார் விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×