search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு மது பாட்டில்கள் கடத்திய 8 பேர் கைது

    எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 816 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    கொரோனா 2-வது அலை பரவலைதடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிறர் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தி வருதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.

    சேலத்தில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சந்தோஷ் குமார் உத்தரவின்பேரில், போக்குவரத்து துணை கமி‌ஷனர் மூர்த்தி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கருப்பூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட டோல்கேட் பகுதியில் உதவி கமி‌ஷனர் நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, சத்தியமூர்த்தி ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். அந்த வாகனங்களை சோதனை போட்டபோது அதில் மொத்தம் 6 ஆயிரத்து 722 மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.

    அவற்றை கடத்தி வந்த மன்னார்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 24), கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் (32), பெங்களூரை சேர்ந்த இளங்கோ (38), கள்ளக்குறிச்சி நெடுமானூரை சேர்ந்த சசிஸ்ரீதர் (32), சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ராபர்ட் (53), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த கிருத்திக்ராஜன் (38), மான்குப்பையை சேர்ந்த உதயசூரியன் (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து வேனில் மது பாட்டில்கள் கடத்தி வந்த எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 816 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×