search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 40 சதவீதம் குறைந்தது

    கோவை மாவட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி மூலமாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் 60 முதல் 80 சதவீதம் வரை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வந்தது. இங்கு முதலில் குறைவான எண்ணிக்கையிலேயே தொற்று பாதிப்பு இருந்தது. ஆரம்பத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.

    ஆனால் நாட்கள் செல்ல, செல்ல கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் வேகமெடுத்தது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி கடந்த 2 வாரங்களாக தொற்று பாதிப்பில் தமிழக அளவில் முதல் இடத்தில் கோவை மாவட்டம் இருந்து வருகிறது. சென்னையைவிட இங்கு அதிகமாக தொற்று பரவியதால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட தன் விளைவாக தற்போது கோவை மாவட்ட த்தில் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக 3 ஆயிரம், 4 ஆயிரம், 4,500 என சென்று கொண்டிருந்த தொற்று எண்ணிக்கை நேற்று 3 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக 2,980 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்ட பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர்.

    தொற்று பாதிப்பு குறையும் அதே வேளையில் உயிரிழப்பு மட்டும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று இதுவரை இல்லாத உச்சமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மாவட்டத்தில் 1,394 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 37 ஆயிரத்து 505 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாவட்ட அளவில் தொற்று குறைந்து வந்தாலும் இன்னமும் கோவை மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்திலேயே நீடித்து வருகிறது. இந்த அளவுக்கு கோவை மாவட்டத்தில் தொற்று பரவ காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரதுறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இவர்களின் முதல் கட்ட ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தான் அதிகளவில் கொரோனா தொற்றை பரப்பியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

    நோய் பாதித்த நபரின் மூலமாக அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஒரு கொரோனா நோயாளி மூலமாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் 60 முதல் 80 சதவீதம் வரை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, நோயாளிகளின் உறவினர்கள் கூடவே இருந்து பராமரித்து வந்துள்ளனர்.

    அப்படி இருந்தவர்கள் வெளியில் வந்து நோய் தொற்றை பரப்பியுள்ளதையும் கண்டறிந்துள்ளனர். கோவையில் கொரோனா அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என்பதை சுகாதாரதுறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    தற்போது கொரோனா நோயாளிகள், அவரது உறவினர்கள், குடும்பத்தினர் இடையே உள்ள சங்கிலி தொடர்பை துண்டித்தன் விளைவாக மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

    முன்பு கொரோனா நோயாளிகளை உறவினர்கள் கார்கள், மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இதுவும் தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது. தற்போது கொரோனா நோயாளிகள் கார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து செல்லப்படுவதன் காரணமாக தொற்று குறைந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது மாவட்டம் முழுவதும் தொற்று பரவலானது 40 சதவீதம் குறைந்துள்ளது.

    Next Story
    ×