search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    சிறையில் கைதி கொலை- பாளை ஜெயிலர் சஸ்பெண்டு

    சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெயிலர் சண்முகசுந்தரத்திடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமனோ. (வயது 27).

    ஒரு வழக்கில் கைதான இவரை பாளை மத்திய ஜெயிலில் அடைப்பதற்காக கடந்த 22.4.2021 அன்று ஜெயிலுக்கு அழைத்து சென்றபோது 7 கைதிகள் சராமரியாக தாக்கி அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜெயில் கைதிகள் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கில் அஜாக்கிரதையாக செயல்பட்ட துணை ஜெயிலர், 3 உதவி ஜெயிலர்கள், 2 சிறை காவலர்கள் என 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜெயில் அதிகாரிகள் சிலரையும் சேர்க்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி கேட்டு, முத்துமனோ உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து வந்தனர்.

    இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முத்துமனோவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கடந்த 42 நாட்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாளை மத்திய சிறை ஜெயிலர் சண்முகசுந்தரம் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சுனில்குமார் சிங் வெளியிட்டார்.

    இந்தநிலையில், சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெயிலர் சண்முகசுந்தரத்திடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள், முத்து மனோவின் உறவினர்களிடம் அவரது உடலை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×