search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
    X
    முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

    தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம்- நிபுணர் குழு பரிந்துரை

    சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டாலும் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் தொற்று பாதிப்பு குறையாததையடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முக ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  மருத்துவ மற்றும் நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அவர்கள் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தங்களது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    தமிழகம் முழுவதும் மூன்று வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரான தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கை தளர்த்துவது என்பது கடினமானது என்று நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.


    அவர்கள் கூறும்போது, ‘சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டாலும் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மண்டலத்துக்குள்ளே ஈரோட்டில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவையில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கி இருக்கிறது.

    குறைந்த தொற்று விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளை கொண்ட ஒரு மண்டலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. சுகாதார கொள்கைகள் பொருளாதார உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

    அதிக தொற்று விகிதம், பாதிப்பு அல்லது பலி எண்ணிக்கை அதிகரித்து ஆஸ்பத்திரிகளில் அதிக நோயாளிகள் வருவது ஆகியவற்றை கட்டுப்பாடுகளை தீர்மானிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள் ஆகும்.

    வெவ்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் வித்தியாசங்கள் நிலவுவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம். முதலில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து திறக்கலாம்.

    அதேவேளையில் கொரோனாவின் அடுத்த அலை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை கையாள மாவட்டங்கள் முழுவதும் படுக்கைகள் மற்றும் மனித வளங்களை அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×