search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    சீலநாயக்கன்பட்டி மின் மயானத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மின் மயானத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மின் மயானத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் வசித்து வரும் பொதுமக்கள் நேற்று மின் மயானம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், இந்த மின் மயானத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்யும் போது துகள்கள் பறந்து வந்து தங்கள் பகுதியில் விழுகின்றன.

    தகனம் செய்வதால் எப்போதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதன்மூலம் தங்களுக்கும் கொரோனா பரவும் அச்சத்தில் உள்ளோம். ஆகையால் இந்த மின் மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கூடாது என்று தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களிடம், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல்களை தகனம் செய்யும் போது அதன் துகள்கள் விழாதபடி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×