search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வஉசி மார்க்கெட் மூடப்பட்டு இருப்பதை காணலாம்
    X
    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வஉசி மார்க்கெட் மூடப்பட்டு இருப்பதை காணலாம்

    வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று- சேலம் வ.உ.சி. மார்க்கெட் மூடப்பட்டது

    மார்க்கெட்டில் உள்ள மற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக வ.உ.சி. மார்க்கெட்டை மூட மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் மிக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா தொற்று பாதித்த மக்கள் வசிக்கும் இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் நடப்பதால், சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் தற்காலிகமாக வ.உ.சி. மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு காய்கறி, பூக்கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன. அங்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பூக்களை விவசாயிகள் கொண்டு வந்து மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அதை பெற்றுக்கொண்டு மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காய்கறி வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மார்க்கெட்டில் உள்ள மற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக வ.உ.சி. மார்க்கெட்டை மூட மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

    இதையொட்டி நேற்று முதல் வ.உ.சி. மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் நேற்று மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் யாரும் வரவில்லை. அதே போன்று பொதுமக்களும் யாரும் வரவில்லை. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் நேற்று வ.உ.சி. மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மார்க்கெட் முன்புறம் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு அங்கு மாநகராட்சி சார்பில் மார்க்கெட் மூடப்பட்டு உள்ளது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×