search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
    X
    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

    ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பு

    ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 1,618 படுக்கைகள் இருந்த போதிலும் தற்போது 500 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தொற்று பாதிக்கப்படக் கூடியவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்கிறார்கள். லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் தனிமை படுத்தப்படுகிறார்கள்.

    மூச்சுத்திணறல் ஏற்படக் கூடியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் தான் உயிர்பிழைக்க முடியும். அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவ மனைகளுக்கு விரைவாக அழைத்து செல்கிறார்கள்.

    சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டதால் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 1,618 படுக்கைகள் இருந்த போதிலும் தற்போது 500 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல ஸ்டான்லி மருத்துவமனையில் 1200 படுக்கைகள் நிரம்பிவிட்டன. அதனால் அங்கு கூடுதலாக 1,250 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் 750 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைகிறது.

    நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் நிரம்பிவிட்டன. அதனால் சிகிச்சைக்கு பிறகு பாதிப்பு குறைந்தவர்கள் உடனடியாக சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்படுகிறார்கள். ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறையாக இருப்பதால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் ஆம்புலன்சில் பல மணிநேரம் மருத்துவ மனை வாசலில் காத்து கிடக்கிறார்கள். உயிருக்கு போராடி வருகிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    ஸ்டான்லி, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிகள் முன்பு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆம்புலன்சில் இன்று காத்திருந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதி இல்லை. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகளை மற்ற வார்டுகளுக்கு மாற்றக்கூடிய நிலை உருவாகி உள்ளது.

    இதனால் சிகிச்சை பெற காலதாமதம் ஏற்படுகிறது. உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்ற உறவினர்கள் எடுக்கும் முயற்சி தோல்வியில் முடிகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை, ஓமந்தூரார் மருத்துவ மனை, கிண்டி கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் நோயாளிகள் காத்திருக்கின்ற சூழல் உருவாகி உள்ளது.

    இதேபோல பெரும்பாலான தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. இதனால் நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக உறவினர்கள் அலைந்து திரிகிறார்கள்.

    அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்தால் தான் கூடுதலாக நோயாளிகளை சேர்க்க முடியும்.

    இதற்கிடையில் நோய் தொற்றும் வேகமாக பரவுவதால் பாதிக்கப்படுகின்ற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கக் கூடிய சம்பவம் ஆங்காங்கே நடக்கிறது.

    Next Story
    ×