search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிவாலயத்தில் நடனமாடி கொண்டாட்டம்
    X
    அறிவாலயத்தில் நடனமாடி கொண்டாட்டம்

    அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டம்

    தேர்தல் முடிவுகளில் தி.மு.க. முன்னணி என்று வர தொடங்கியதும் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    அரசியல் கட்சிகள் தேர்தல் கொண்டாட்டம், ஊர்வலங்கள் செல்ல வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    தேர்தல் முடிவுகளில் தி.மு.க. முன்னணி என்று இன்று காலையில் வர தொடங்கியதும் தி.மு.க. தொண்டர்கள் வெளியில் வர தொடங்கினார்கள்.

    முழு ஊரடங்கு கட்டுப்பாடு இருந்த போதிலும் தேர்தல் வெற்றி உற்சாகத்தில் சாலைகளில் நடமாட தொடங்கினர். காலை 10 மணிவரை அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.

    அதன் பின்னர் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. முன்னணி பெற்று வந்ததை தொடர்ந்து தொண்டர்கள் அறிவாலயத்தில் குவியத் தொடங்கினார்கள். 10.45 மணியில் இருந்து ஒவ்வொருவராக வந்தார்கள்.

    அண்ணா அறிவாலயம் முழுவதும் தொண்டர்கள், மகளிர் அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தளபதி வாழ்க என்று கோ‌ஷமிட்டனர். இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை, கலைஞர்சிலை முன்பு அ.தி.மு.க. அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர். அங்கு கூடிய தொண்டர்கள் தலைவர்கள் சிலை முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    அறிவாலயத்தில் நடனமாடி கொண்டாட்டம்
    அறிவாலயம் சுவரில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ‘மூவேந்தர் காலம் தொடங்கியது’ மானாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் இனி கலைஞர் ஆட்டம், தளபதி ஆட்டம் என்ற அடுக்கு மொழி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

    ‘ஊழல் ஆட்சியின் அவலம் மாறியது. உதயசூரியன் அரியணை ஏறியது’. ‘இதுவரை எதுவும் பண்ணாத சர்க்கார் இனி மக்களை காக்கும் சர்க்கார்’.

    ‘சூரியனால் இலை சுருண்டது. கோடை காலத்தால் அல்ல. கொள்ளை ஆட்சியால்’.

    இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் 2013 தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர் நலச்சங்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருந்தது.
    Next Story
    ×