search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருச்சி மத்திய மண்டலத்தில் 1,500-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

    தொடர்ந்து ஏறுமுகமாக செல்லும் கொரோனா திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு 1,500-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
    திருச்சி:

    கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் மிக அதிவேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறையினர் அதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தொற்றின் வேகம் சற்றும் குறையவில்லை.

    தொடர்ந்து ஏறுமுகமாக செல்லும் கொரோனா திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு 1,500-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 480 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மத்திய மண்டலம் முழுவதும் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    இதில் புதுக்கோட்டையில் 2 பேரும், கரூர், தஞ்சாவூர், திருச்சியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதில் புதுக்கோட்டையில் 46 மற்றும் 86 வயது முதியவரும், கரூரில் 55 வயது பெண்ணும், தஞ்சையில் 59 வயது பெண்ணும், திருச்சியில் 62 வயது முதியவரும் இறந்துள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் படுக்கைகளுடன் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இறுதியாண்டு படிக்கும் 30 செவிலியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அரசு ஆஸ்பத்திரி நர்சுகள் பற்றாக்குறையை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் வனிதா தெரிவித்தார். தொடர்ந்து திருச்சி மாநகர பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு ஏற்றவாறு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் விரைவில் குணமாகி இல்லம் திரும்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே திருச்சியை அடுத்த திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள ராம்ஜி நகரில் கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட அந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களுக்கு காலை, மாலை வேளைகளில் கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்கள். மேலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் மத்திய மண்டலத்தில் நாகையில் 294 பேருக்கும், தஞ்சையில் 287 பேருக்கும், திருவாரூரில் 154 பேருக்கும், கரூரில் 125 பேருக்கும், புதுக்கோட்டையில் 98 பேருக்கும், அரியலூரில் 62 பேருக்கும், பெரம்பலூரில் 18 பேருக்கும் சேர்த்து நேற்று ஒரே நாளில் மத்திய மண்டலத்தில் 1,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    Next Story
    ×