search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வட மாநிலங்களில் வேகமாக பரவும் கொரோனா எதிரொலி: 8 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் தேக்கம்

    ஜவ்வரிசியை பொருத்த வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும் வட மாநிலங்களில் தான் உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சிறிய தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கடும் சரிவை சந்தித்தன.தற்போது 2-வது அலையும் தொழில்களை முடக்கி போட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி சார்ந்த சேகோ தொழில் மூலமாக ஆண்டுக்கு ரூ. 1300 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.

    விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சேகோ உற்பத்தியாளர்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனை சார்ந்துள்ளனர். 1 லட்சம் ஹெக்டேர் பரப் பளவில் மரவள்ளி கிழங்கு ஆண்டு தோறும் பயிரிடப்பட்டு வருகிறது. 300-க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன.

    ஒவ்வொரு சேகோ பேக்டரிகளிலும் தினசரி 1000 மூட்டைகள் மரவள்ளி கிழங்கை அரைக்கும் திறன் உள்ளது. ஆத்தூர் பகுதியில் மரவள்ளி கிழங்குக்கு நல்ல விலை கிடைக்கிறது என்பதால் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும் சீசன் நேரத்தில் ஆத்தூருக்கு கிழங்குகள் கொண்டு வரப்படுகிறது. ராசிபுரம், நாமக்கல், கடலூர், திருவண்ணாமலை உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்தும் கிழங்கு வரத்து அதிகமாக உள்ளது.

    ஆத்தூரில் இருந்து சீசன் நேரத்தில் தினசரி 5 ஆயிரம் மூட்டைகள் அளவிற்கு ஜவ்வரிசி, ஸ்டார்ச் சேலம் சேகோசர்விற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட உள்ளது. சேலம் சேகோசர்வ் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஜவ்வரிசி மூட்டை, ரூ. 5 ஆயிரம் வரை விற்கும் என்ற நம்பிக்கையில் மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்து சேகோ பேக்டரிகள் அதிக அளவில் ஜவ்வரிசி உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டன. இதனால் வழக்கத்தைவிட உற்பத்தி அதிகமானது. ஜவ்வரிசியை பொருத்த வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும் வட மாநிலங்களில் தான் உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    ஜவ்வரிசி வியாபாரம் வடமாநிலத்தை சார்ந்து இருப்பதால் வட மாநிலங்களில் நடைபெறும் விசே‌ஷங்களை பொருத்தே மார்க்கெட் நிலவரம் இருப்பது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக வடமாநிலங்களில் பெருமளவு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 8 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×