search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குமரி மாவட்டத்தில் தினமும் உயிர்ப்பலி - கொரோனாவுக்கு 11 நாளில் 33 பேர் உயிரிழப்பு

    குமரி மாவட்டத்தில் முதல் கட்டத்தை விட தற்போதைய 2-வது அலையில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இளம்வயதினர் மற்றும் சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

    இதனால் குமரி மாவட்டத்தில் முதல் கட்டத்தை விட தற்போதைய 2-வது அலையில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இரண்டாவது அலையின் தீவிரம் கடந்த 3 வாரத்திற்கு முன்பு தான் தொடங்கியது. பரவலின் தொடக்கத்தில் தொற்று பரவல் தினமும் இரண்டு இலக்கத்திலேயே இருந்துவந்தது.

    இந்தநிலையில் தற்போது தினசரி பாதிப்பு மூன்று இலக்க எண்ணாக மாறியிருக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம்(20-ந்தேதி) வரை மாவட்டம் முழுவதும் 2,018 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகி வருவதால் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமின்றி தொற்று பாதித்த நபர்களை உடனடியாக கண்டறிய வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதில் காய்ச்சல், சளித்தொல்லை உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

    வீடுவீடாக சென்று நடத்தப்படும் இந்த சோதனையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பலர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவ்வாறு கண்டறியப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோன்று தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே தான் இருக்கிறது.

    மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. வாரத்திற்கு ஒரு சிலர் மட்டுமே இறந்து வந்த நிலையில், தற்போது தினமும் 2 அல்லது 3பேர், அதிகபட்சமாக 4பேர் வரை பலியாகி வருகின்றனர்.

    12 மற்றும் 15-ந்தேதிகளில் மட்டும் தலா ஒருவரும், 14-ந்தேதி 2பேரும் இறந்திருக்கின்றனர். 13, 17, 18, 19, 20 ஆகிய 5நாட்களில் தலா 3பேர் இறந்திருக்கின்றனர். 16 மற்றும் 21-ந் தேதிகளில் தலா 4பேர் பலியாகிவிட்டனர். அதுதான் அதிக நபர்கள் பலியான நாட்களாக இருந்த நிலையில், நேற்று(22-ந்தேதி) 6பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

    ஒரேநாளில் 6பேர் பலியாகி இருப்பது கொரோனா பரவலின் தீவிரத்தை காட்டுகிறது. தொற்று பரவுவதை போன்று, கொரோனா பாதித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 11நாட்களில் மட்டும் மொத்தம் 33பேர் பலியாகி இருக்கின்றனர்.

    இது சுகாதாரத்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதனை 2-வது பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிப்பதன் மூலம் காண முடிகிறது.

    Next Story
    ×