search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்ட வயலில் தேங்கியுள்ள மழைநீர்
    X
    தாராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்ட வயலில் தேங்கியுள்ள மழைநீர்

    பலத்த மழை- அறுவடைக்கு தயாரான 200 ஏக்கர் சின்ன வெங்காயம் தண்ணீரில் மூழ்கி சேதம்

    திருப்பூர் மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த மழையால் 200 ஏக்கர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயம் மழைநீரில் மூழ்கி அழுகியது.
    திருப்பூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில் காங்கேயத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகிறது.

    நேற்றிரவு திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 2 நாட்களாக பெய்த மழையால் பல இடங்களில் சாலைகள் மழைநீரால் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    மேலும் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. தாராபுரம் தாலுகா பகுதிகளான சத்திரம், கோவிந்தபுரம், நாரணாபுரம், தாசர்பட்டி உள்ளிட்ட 50க்கும் அதிகமான கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவிட்டு விவசாயிகள் வெங்காய சாகுபடி செய்தனர்.

    நன்கு விளைந்த சின்ன வெங்காயம் அடுத்த 15 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்தநிலையில் 3 நாட்களாக பெய்த மழையால் விளைநிலத்தில் தண்ணீர் தேங்கியது. இதில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயம் மழைநீரில் மூழ்கி அழுகியது. இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    மழை தொடர்ந்தால் பயிரிடப்பட்டுள்ள 5 ஆயிரம் ஏக்கர் வெங்காயமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமான வெங்காயத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அடுத்துள்ள மருதுறை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு செல்கிறது.

    அவினாசி பகுதியில் பெய்த மழையால் போத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 100க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.

    மாவட்டத்தில் சில இடங்களில் மழையால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் மற்ற இடங்களில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் சாகுபடி பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மேலும் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி பணியாளர்கள் மின் மோட்டார் மூலம் வெளியேற்றினார்.
    Next Story
    ×