search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் (கோப்புப்படம்)
    X
    மாணவிகள் (கோப்புப்படம்)

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வை தள்ளி வைப்பது குறித்து இன்று மாலை முடிவு

    கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 3-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருப்பதால் அதற்கு மறுநாள் நடக்க இருந்த பிளஸ்-2 தமிழ் தேர்வை மட்டும் வேறொரு நாளுக்கு அரசு தள்ளி வைத்தது.

    இதைத் தொடர்ந்து மே 5-ந் தேதி ஆங்கிலப் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிளஸ்-2 தேர்வு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் தேர்வை மட்டும் ஒத்தி வைத்து மற்ற தேர்வுகள் அறிவிக்கப்பட்டப்படி நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய கல்வித்துறை ஒத்தி வைத்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    தமிழகத்தில் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படுமா? அல்லது ஒத்தி வைக்கப்படுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

    இதற்கிடையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் லதா, அமிர்தஜோதி, நிர்மல் ராஜ், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்தலாமா? பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    பல்வேறு மாவட்டங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் தேர்வை ஒத்திவைப்பதன் மூலம் மாணவர்களின் நலனை பாதுகாப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    தேர்வுக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் இக்கால கட்டத்தில் தொற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் சுகாதார நிபுணர்களின் கருத்துகளும் , உயர்மட்ட குழுக்களின் ஆலோசனைகளையும் பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    எனவே பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவு இன்று மாலைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×