search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படுக்கைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை படத்தில் காணலாம்.
    X
    படுக்கைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை படத்தில் காணலாம்.

    ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காவிட்டால் உடனே உரிய சிகிச்சை பெறுங்கள்-மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள்

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்பதற்காக பயப்பட வேண்டாம். தாமதம் இல்லாமல் சிகிச்சை பெற்றாலே குணமாகி விடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த படி உள்ளது.

    தற்போது 18 ஆயிரத்து 673 பேர் சென்னை நகரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், கே.கே.நகர் பெரிபெரல் ஆஸ்பத்திரி போன்றவற்றில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    இது தவிர 114 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், தனி அறைகள் கிடைக்கவில்லை.

    மொத்தம் உள்ள 116 தனியார் ஆஸ்பத்திரிகளில் 47 ஆஸ்பத்திரிகளில் வெண்டிலேட்டர் வசதிகள் காலியாக இல்லை. 54 ஆஸ்பத்திரிகளில் ஐ.சி.யூ. படுக்கைகள் கிடைக்கவில்லை. 41 ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் முழுமையாக பயன்பாட்டில் உள்ளன.

    ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 525 படுக்கையில் 425 முழுமையாக நிரம்பி விட்டன. அங்கு 120 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. 15 பேருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1125 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 1000 படுக்கைகள் காலியாக உள்ளன. ஆனாலும் நோயாளிகளுக்கு தனி அறைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

    இது சம்பந்தமாக ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன் கூறும்போது, “நோயாளிகளில் பலர் தனி அறை வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தனி அறை கொடுக்க முடியாது. தனி அறை வேண்டும் என்பதற்காக காத்திருக்கவும் கூடாது. உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு மோசமாகி விடும் என்று கூறினார்.

    மேலும் சில நிபுணர்கள் கூறும்போது, தற்போதைய நிலையில் வேகமாக சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதை தாமதப்படுத்தினால் நோய் தொற்று தன்மை மேலும் அதிகமாகி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். அரசு ஆஸ்பத்திரிகளில் பொது படுக்கை வார்டுகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்களும், நர்சுகளும் கண்காணித்தபடி இருப்பார்கள். எனவே அதுபோன்ற வார்டுகளை தேர்வு செய்து சிகிச்சை பெறலாம். படுக்கை கிடைக்கவில்லை என்றாலும் சிகிச்சைக்கு தாமதம் செய்ய கூடாது என்று கூறினார்கள்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பல நோயாளிகள் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் சிபாரிசுடன் வருகின்றனர். ஆனாலும் போதிய அறைகள் படுக்கை வசதிகள் இல்லாததால் அவற்றை வழங்க முடியவில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்பதற்காக பயப்பட வேண்டாம். தாமதம் இல்லாமல் சிகிச்சை பெற்றாலே குணமாகி விடலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×