search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்திற்கு நாட்டுப்புற கலைஞர்கள் மேளம் அடித்தபடி மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அலுவலகத்திற்கு நாட்டுப்புற கலைஞர்கள் மேளம் அடித்தபடி மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

    தூத்துக்குடியில் கிராமிய கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் கிராமிய கலைஞர்கள் கோவில்களில் சமூக இடைவெளியில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமிய கலைஞர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சமூக ஆர்வலர் தொண்டன் சுப்ரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளங்களுடன் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1000 குடும்பத்திற்கு மேல் கிராமிய இசைக் கலைஞர்கள் பாரம்பரியமான கிராமிய இசையை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொண்டனர். அதன் பிறகு சில தளர்வுகளை அரசு அறிவித்தது. இதனால் ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் அந்த தொகை எங்களின் கடனை திருப்பி செலுத்த மட்டுமே முடிந்தது. 

    இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அரசு எங்களுக்கு நிவாரண தொகையாக நலவாரியம் மூலம் ரூ.2000 வழங்கியது. வேறு எந்த நிவாரணத் தொகையும் கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் கோரிக்கையை பலமுறை அரசுக்கு தெரிவித்தோம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை தற்போது மீண்டும் அரசு, விழாக்களை ரத்து செய்து உள்ளது. இதனால் மீண்டும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் பெரிய அளவில் மக்கள் கூடும் விழாக்கள் தவிர, சிறிய கோவில்கள், கிராமப்புற கோவில்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு வழிகாட்டுதல்படி நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இதனால் கிராமிய இசைக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இல்லாத பட்சத்தில் இந்த ஊரடங்கு முடியும் வரை மாதம்தோறும் கிராமியக் கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
    Next Story
    ×