search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு

    கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,162 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 36 வயது இளம்பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,767 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 150 பேர் நேற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் மக்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றாதது தான். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தினசரி பரிசோதனையை 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக அதிகரித்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த வாரம் 1 லட்சம் கொரோனா தடுப்பூசி மாவட்டத்துக்கு வந்துள்ளது.

    தடுப்பூசி போடும் பணியையும் நாங்கள் விரைவாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். வருகிற காலகட்டத்தில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க உள்ளோம். தற்போது வீடுகளில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×