search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
    X
    பள்ளியில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

    6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்

    வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.

    மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத்திட்டங்கள் நடத்தி முடித்து திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில் பள்ளிகள் தீவிரமாக உள்ளன.

    இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.

    இதற்கிடையில் சட்டசபை தேர்தல் மற்றும் புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3-ந் தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

    வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா நோயாளிகள் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முகக்கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு உடை அணிந்து ஓட்டுப்பதிவு செய்தார்கள்.

    வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் வந்து சென்றதால் பள்ளிகளை சுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளையும் இன்று கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படும் காட்சி

    வகுப்பறைகள், கழிவறைகள், இருக்கைகள், கைப்பிடிகள் போன்றவற்றை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர். இந்த பணிகளை அனைத்து பள்ளிகளும் இன்று செய்தன.

    தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து இந்த பணியினை மேற்கொண்டனர். நாளை (8-ந் தேதி) முதல் வகுப்புகள் தொடங்குகிறது. மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செய்து வருகின்றன.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடி க்கைளை கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னையில் மாநகராட்சி பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் தூய்மை செய்யும் பணி இன்று நடைபெற்றது. தேர்தல் பணி காரணமாக தேங்கிய குப்பைகள், கழிவுகளை இன்று அகற்றினார்கள். பயன்படுத்தப்பட்ட கையுறைகள், முகக்கவசம் போன்றவற்றை அப்புறப்படுத்தினார்கள்.
    Next Story
    ×