search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி
    X
    சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி

    தமிழகத்தில் 9ந் தேதி முதல் கட்டுப்பாடு- சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி

    கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

    அனைத்து மாநிலங்களும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

     பிரதமர் மோடி

    இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை மாலை அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி அவர் விரிவாக கேட்டு அறிகிறார்.

    இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் 4 வாரங்கள் முக்கியமானது என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

    நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    ஆனால் பொது மக்களில் பலர் அதனை கண்டு கொள்வதில்லை. தேர்தல் பிரசாரங்களின்போது இது கண்கூடாக தெரிய வந்தது. முககவசம் அணியாமலேயே பலர் கட்சிகூட்டங்களில் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் நடத்தும் ஆலோசனைக்கு பிறகு இந்த புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் வருகிற 9-ந் தேதி முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

    இதுதொடர்பாக நேற்று சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கையை பலரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி இது உண்மையா? என்று கேட்டார்கள்.

    இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்களை மீண்டும் முடக்கும் அளவுக்கு கடுமையான ஊரடங்கு இருக்காது’’ என்று விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×