search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெப்பம் அதிகரிப்பதால் பகல், இரவு நேரங்களில் வியர்வை கொட்டும் - பழம், இளநீர், மோர் அருந்த வானிலை மையம் அறிவுறுத்தல்

    கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுமக்கள் பழம், இளநீர், மோர் அருந்த வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாடமுடிவதில்லை.

    இந்த நிலையில் கோடை வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதம் வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாகவும் வியர்க்கும்.

    கோப்புபடம்

    இதனால் தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழ வகைகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

    இன்று முதல் 7-ந் தேதி வரை கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்ப நிலையானது இயல்பை விட 3-ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

    திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள் பகல் 12 மணி முதல் 4 மணிவரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

    மற்ற மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும்.

    இதற்கிடையில் வளி மண்டலத்தில் 1 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×