search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கொரோனாவினால் மரணம் அடைந்த டாக்டர் உடலை தோண்டி கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

    சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இவரது உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் மற்றும் வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

    ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், டாக்டர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

    அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து மே 2-ந்தேதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சைமனின் மனைவி ஆனந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி அப்துல் குத்தூஸ், “வேலங்காடு மயானத்தில் இருந்து டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். உரிய நடைமுறைகள் பின் பற்றப்பட வேண்டும், போலீஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும், வீடியோ பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனையுடன் மீண்டும் அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×