search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- திருச்சியை காலி செய்யும் வடமாநில தொழிலாளர்கள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுவதால் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

    திருச்சி:

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று தமிழகத்தில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொட்டது. தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.

    முன்னதாக மார்ச் மாத இறுதியில் முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடைசி நேரத்தில் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    குறிப்பாக திருச்சியில் அதிக அளவில் ஓட்டல் கடையில் வேலை பார்த்து வந்தவர்கள் கிடைத்த வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், இன்னும் பலர் நடந்தும் அவரவர்கள் ஊர்களுக்கு புறப்பட்டனர். வேறு வழியின்றி சொந்த ஊர் திரும்ப முடியாதவர்கள் திருச்சியிலேயே தங்கினர். அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கி ஆதரவளித்தன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தது. பெரிய ஓட்டல்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்த வாகனங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை அவர்களின் ஊர்களுக்கே சென்று அழைத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    அதேபோல் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளி மாநிலத்தவர்களும் திருச்சி திரும்பினர். அவரவர்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே தமிழகத்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ள கொரோனாவால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    கடந்த ஆண்டை போன்று கடைசி நேரத்தில் சொந்த ஊர் திரும்ப தவித்ததை போன்று இந்த ஆண்டும் நிலைமை ஆகிவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இதையடுத்து தற்போதே சுதாரித்துக்கொண்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் தற்போதே சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையம் இன்று வட மாநிலத்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருச்சியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயிலில் பயணம் செய்ய வட மாநிலத்தவர்கள் இன்று அதிக அளவில் குவிந்தனர்.

    ஓட்டல் தொழிலாளர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் பின்னலாடை, ஆயத்த ஆடை, பனியன் கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை முதலே மூட்டை, முடிச்சுகளுடன் திரண்டு வந்தனர்.

    அவர்களில் குழந்தைகளுடன் ஏராளமானோர் இருந்தனர். சாப்பாடு பொட்டலங்களுடன் திரண்டவர்கள் அங்கேயே சாப்பிட்டு ரெயிலுக்காக காத்திருந்தனர். மேலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்படும் ஹவுரா எக்ஸ் பிரஸ் ரெயிலுக்கான அனைத்து முன்பதிவுகளும் முடிந்து விட்டதாக ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கேரளா, கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த திருச்சியில் வேலை பார்த்து வருபவர்களும் கொரோனா பீதியால் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே தற்போது அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. அதில் வாக்களிக்க செல்வதாகவும் ஒருசிலர் கூறினர்.

    இருந்த போதிலும் பெரும் பாலானவர்கள் கொரோனா பரவல் காரணமாக தாங்கள் எங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறோம் என்று தெரிவித்தனர். திருப்பூர் உள்ளிட்ட நகரத்தில் பாதி காலியானது போல் நாங்கள் உணர்கிறோம் என்று வட மாநிலத்தவர்கள் கூறினர்.

    Next Story
    ×