search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    தே.மு.தி.க.வுக்கு 2 சதவீத வாக்குகளா?- பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

    2021-ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராசியான வெற்றி ஆண்டாக அமையும் என அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
    சென்னை:

    ஆவடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பட்டாபிராமில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆவடி சங்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார்.

    மண்டல பொறுப்பை விஜயகாந்த் எனக்கு வழங்கி உள்ளார். அதில் 37 தொகுதிகள் வருகிறது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் 7 தொகுதிகள் மற்றும் ஆவடி தொகுதி ஆகியவை எனது பொறுப்பில் வந்துள்ளது. இந்த பொறுப்பை வழங்கிய விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதும் செல்ல வேண்டிய நீங்கள் ஏன் மண்டல பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று எல்லோருமே கேட்டனர். விஜயகாந்த் எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதனை ஏற்று அதில் அனுபவத்தை பெறுவதுதான் எனது பழக்கம்.

    விருத்தாசலத்தில் விஜயகாந்துக்காக பிரசாரம் செய்தபோது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.

    வாள் வைத்து போராடினார்கள் அன்றைய மன்னர்கள். இன்று தமிழக அரசியலில் வேல் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    நமக்கு வாளும், வேலும் வேண்டாம் மக்கள் சக்தி மூலம் நினைத்த இடத்தை அடைய முடியும். இதுவரை நாம் ஆட்சிக்கு வரவில்லை. கட்சி பதவியை தவிர அரசு பதவிகள் எதையும் கட்சியினர் வகிக்கவில்லை. ஆனால் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சரிசமமாக நீங்கள் களத்தில் நிற்கிறீர்கள்.

    லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான கட்சியாக தே.மு.தி.க. உள்ளது. நமது கட்சி மீது சிறிய குறை கூட சொல்ல முடியாது. அதனால் தே.மு.தி.க.வுக்கு 2 சதவீத ஓட்டுதான் உள்ளது என்று தவறான தகவலை பரப்புகிறார்கள். அந்த கட்சி கரை சேருமா? என்றும் பரப்பி விடுகிறார்கள். எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சியை தருவதே தே.மு.தி.க.வின் கொள்கையாகும். ஆனால் சிலர் கொள்கை இல்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். 234 தொகுதியிலும் மக்களை சந்தித்து களம் கண்ட ஒரே இயக்கம் தே.மு.தி.க. மட்டுமே.

    பாராளுமன்ற தேர்தலில் 4 தொகுதியில் மட்டுமே போட்டியிட்டோம். இதை வைத்து 2 சதவீத ஓட்டுதான் உள்ளது என்று எப்படி கூற முடியும். தே.மு.தி.க.வின் வாங்கு வங்கியில் இப்போதும் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே நாம் இன்னும் செல்லவில்லை. ஆனால் 7 மண்டலங்களாக பிரித்து அனைத்து பகுதிகளிலும் சுறுசுறுப்பாக தேனீக்கள் போல உழைத்து கொண்டிருக்கிறோம்.

    வருகிற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியோடு கூறிக் கொள்கிறேன். கூட்டணி தர்மத்தின்படி உண்மையாக இருந்து வருகிறோம்.

    தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அவர்கள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். 2021-ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராசியான வெற்றி ஆண்டாக அமையும். இதற்காக நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். விஜயகாந்த் நிச்சயம் பிரசாரத்துக்கு வருவார்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.
    Next Story
    ×