search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

    காரணங்களை கண்டறிந்து நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு மாதம் கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த நாட்களில் இரு கோர விபத்துகள் நிகழ்ந்து 9 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த விபத்துகளுக்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என நன்றாகத் தெரியும் நிலையில், தவறுகளை திருத்திக்கொள்ள மக்கள் முன்வராவிடில் மோசமான விளைவுகளே ஏற்படக்கூடும்.

    கள்ளக்குறிச்சியிலிருந்து கடந்த திங்கள் கிழமை சென்னை நோக்கி வந்த மகிழுந்து திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில் சாலையோர மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

    மதுராந்தகத்தை அடுத்த படாளம் என்ற இடத்தில் நேற்று, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குந்து மீது மகிழுந்து மோதியதில் அதில் பயணித்த 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த இரு விபத்துகளும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சென்னைக்கும், திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நடந்தவை தான். இதே போல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும்.

    வெளி நாடுகளில் ஒவ்வொரு நெடுஞ்சாலைக்கும் விபத்து வரலாறு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்படுவதற்கு இதுவே காரணமாகும். ஆனால், நமது நாட்டில் ‘இது விபத்துப் பகுதி’ என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழக்கத்தைக் கைவிட்டு, விபத்துப் பகுதிகளில் உள்ள குறைகளைச் சீரமைத்து, அதில் சாலைவிபத்துகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இதை காவல்துறை உடனடியாக செய்ய வேண்டும்.

    உலகில் விலைமதிப்பற்றது மனித உயிர்கள் ஆகும். சாகச மனநிலை, அலட்சியம் ஆகியவற்றுக்கு அடிமையாகி, விபத்துகளை ஏற்படுத்தி மனித உயிர்கள் பறிபோவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

    எனவே, நிதானமான வேகத்தில் பயணம், அதிகாலை நேரத்தில் பயணம் செய்யாமை, சாலைகளில் விபத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்வதன் மூலம் தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×