search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜெயலலிதா
    X
    ஜெயலலிதா

    ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்- சட்டசபையில் மசோதா தாக்கல்

    விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்க உள்ள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார்.
    சென்னை:

    வேலூர், திருவள்ளூர் நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு 2 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் நிறைய கல்லூரிகள் இடம் பெற்றிருப்பதால் நிர்வாக வசதிக்காக பல்கலைக்கழகங்களை பிரிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வேலூர், திருவள்ளூர் பல்கலைக் கழகங்களை பிரிக்க முடிவு செய்தது. இந்த இரு பல்கலைக்கழங்களில் இருந்தும் பிரிக்கப்பட்ட கல்லூரிகளைக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

    விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இடம்பெறும்.

    விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் புதிய பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.

    நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே விழுப்புரம் புதிய பல்கலைக்கழகத்திற்கும் ஜெயலலிதா பெயரை சூட்ட இயலுமா என்று ஆலோசிக்கப்பட்டது.

    சட்ட நிபுணர்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் புதிய பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான சட்ட மசோதா இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார்.

    இதன் மூலம் விழுப்புரம் புதிய பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் இயங்குவது உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் 2021-ம் ஆண்டு இந்திய தண்டனை தொகுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமசோதாவை தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றொரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

    அந்த சட்ட மசோதாவில் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் (திருத்தம்) சட்டப்பிரிவுகள் இடம்பெற்று இருந்தன. அதை அவர் அறிமுகம் செய்து பேசினார்.

    அமைச்சர் கே.சி.வீரமணி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தம்) சட்டமசோதாவை அறிமுகம் செய்தார்.
    Next Story
    ×