search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடை மேலாளரிடம் ரூ.23½ லட்சம் தங்க வாட்சுகள் கொள்ளை - மதுரையில் நூதனமுறையில் திருடிய வட மாநில வாலிபர்கள்

    மதுரை ஓட்டலில் ரூம் எடுத்து தல்லாக்குளம் வாட்ச் கடையில் 12 தங்க கடிகாரங்களை கொள்ளை அடித்து தப்பிய வடமாநில கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வள்ளுவர் காலனி, ஜே.என். நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 60). இவர் தல்லாக்குளத்தில் பிரபல நிறுவனம் பெயரில் வாட்ச் ஷோரூம் நடத்தி வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி இவரது கடைக்கு போன் வந்தது. அதில் பேசியவர், ‘நான் வடமாநிலத்தில் இருந்து பேசுகிறேன்.

    எங்களுக்கு தங்க வாட்ச்கள் விலைக்கு வேண்டும், உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்.

    அதற்கு கடை மேலாளர் ஹபீஸ்கான், ‘எங்களிடம் பல்வேறு ரகங்களில் தங்க வாட்சுகள் உள்ளன” என்று கூறினார்.

    அப்போது அந்த நபர், “உங்களிடம் இருக்கும் தங்க வாட்ச் டிசைன்களை என் வாட்ஸ்-அப் நம்பருக்கு அனுப்பி வையுங்கள்’ என்று கூறி, செல்போன் நம்பரை கொடுத்தார். உடனே ஹபீஸ்கான், அந்த நம்பருக்கு தங்க வாட்ச் டிசைன்களை அனுப்பி வைத்தார்.

    அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு ஹபீஸ் கானை தொடர்பு கொண்ட அந்த நபர், “எங்களின் தலைவருக்கு நீங்கள் அனுப்பிய டிசைன்கள் மிகவும் பிடித்து உள்ளன.

    நாங்கள் 28-ந்தேதி மதுரைக்கு வருகிறோம். அங்கு உங்களிடம் தங்க வாட்சுகளை விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம்’ என்று கூறினார்.

    இந்த நிலையில் ஹபீஸ் கானுக்கு நேற்று மதியம் அந்த வாலிபர் போன் செய்து, ‘நாங்கள் மதுரையிலுள்ள ஒரு ஒட்டலில் தங்கி உள்ளோம்.நீங்கள் வாருங்கள்” என்று அழைத்தார்.

    இதனை நம்பிய ஹபீஸ்கான் அந்த ஓட்டல் அறைக்கு தங்க வாட்ச் டிசைன்களுடன் சென்றார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் வரவேற் பறையில் இருந்தனர். அவர்கள் ஹபீஸ்கானை அழைத்து கொண்டு ஓட்டல் அறைக்கு சென்றனர்.

    ‘எஙகளின் பாஸ் அடுத்த அறையில் தங்கி உள்ளார். உங்களின் தங்க வாட்ச் டிசைன்களை தாருங்கள்’ என்று கேட்டு வாங்கி கொண்டு அடுத்த அறைக்கு சென்றனர்.

    சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பி வந்தவர்கள், “எங்களுக்கு 3 டிசைன்கள் பிடித்து உள்ளன. அதனை வாங்கி கொள்கிறோம். இதற்கு எவ்வளவு பணம் வேண்டும்?’ என்று கேட்டனர்.

    இதற்கு மேலாளரும் குறிப்பிட்ட தொகையை சொன்னார். இதனை கேட்டு கொண்ட 2 பேரும் அடுத்த அறைக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.

    “எங்கள் பாசுக்கு அந்த 3 டிசைகளும் பிடிக்கவில்லையாம். எனவே நீங்கள் மீண்டும் அனைத்து டிசைன்களையும் தாருங்கள்’ என்று கேட்டு உள்ளனர்.

    இதையடுத்து ஹபீஸ் கான் தன்னிடம் இருந்த 12 தங்க வாட்ச் டிசைன்களை கொடுத்து அனுப்பி உள்ளார். இதனை பெற்றுக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்ப வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஹபீஸ்கான் பக்கத்துக்கு அறைக்கு சென்று பார்த்தார். அங்கு யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஹபீஸ்கான், கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடநே இளங்கோ தல்லாக்குளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில் ரூ.23.62 லட்சம் மதிப்பு உடைய 12 தங்க வாட்ச்களை 2 மர்ம நபர்கள் திருடி சென்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதன்அடிப்படையில் தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ் பெக்டர் பிரதீப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது ஓட்டல் வரவேற்பு அறையில் இருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது 2 வாலிபர்கள் முதுகில் பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியே செல்வது தெரிய வந்தது.

    ஓட்டலில் அந்த வாலிபர்கள் தங்கி இருந்த அறையில் ஒரு சூட்கேஸ் மட்டும் உள்ளது. அதில் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லை.

    தல்லாக்குளம் போலீசார் வரவேற்பு அறையில் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் ரஜினீஷ் பெகல், அசுதோஷ் குமார் ஆகிய பெயர்களில் தங்கியது தெரிய வந்தது.

    இதற்கு ஆதாரமாக அவர்கள் ஓட்டலில் ஆதார் அட்டை நகல்களை கொடுத்து உள்ளனர். அவை உண்மை தானா? என்று தெரியவில்லை.

    ஓட்டலில் தங்கி இருந்த 2 பேரும் கடை மேலாளர் தவிர வேறு எவருடனும் பேசினார்களா? என்பது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரை தல்லாக்குளம் வாட்ச் கடையில் இருந்த 12 தங்க வாட்ச்களை மர்ம நபர்கள் நூதனமாக கொள்ளை அடித்த சம்பவம், மாநகரம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×