search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    குடியரசு தினவிழா- சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

    குடியரசு தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    குடியரசு தின விழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்கலாம் என்ற தகவல் மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் உஷார்படுத்தியுள்ளது.

    மக்கள் அதிகமாக கூடுகின்ற விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி சென்னை விமான நிலையம், விமான நிலையத்தின் சரக்ககப் பகுதிகளில் இன்று காலை முதல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

    விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர். அதைப் போல் விமான பயணிகளுக்கும் வழக்கமான சோதனைகளுடன் கூடுதலாக சோதனையும் நடத்தப்படுகின்றன.

    விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான பரிசோதனை முடிந்து விமானத்திற்குள் ஏறும்போது, அந்தந்த விமான நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை துருவி துருவி சோதனையிடுகின்றனர்.

    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், ஜாம் பாட்டில்கள், அல்வா போன்ற உணவு பொருட்கள் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பணி நேரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதணை நிபுணர்கள் கூடுதலாக பணி அமர்த்தப் பட்டுள்ளனர்.

    அவர்கள் விமான நிலைய கார் பார்க்கிங், பயணிகளுக்கான பாதுகாப்பு சோதணை நடக்கும் இடங்களில் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக விமானங்களுக்கு எரிபொருட்கள் நிரப்பும் இடங்கள், விமானங்களில் பார்சல்கள், பயணிகளின் உடமைகளை ஏற்றும் இடங்கள் கூடுதல் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடிப் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தின் உள்வட்ட பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளது போல், வெளிவட்ட பாதுகாப்பில் விமான நிலைய போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு ஸ்பெ‌ஷல் போலீசார் சுமார் 100 பேர் விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். அதோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் இருந்தே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்கிறது. ஆனால் முக்கிய பிரமுகர்கள், நோயாளிகள், உடல் ஊனமுற்ற பயணிகள் உதவிக்காக சிலருக்கு சிறப்பு அனுமதி பாஸ்கள் வழங்குவது வழக்கம். அந்த சிறப்பு அனுமதி பாஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் வருகிற 31-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

    இதேபோல் சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×