search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

    தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் என கோவையில் நடந்த பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    கோவை:

    கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோவைக்கு வந்து கிராம சபை கூட்டங்களை நடத்தி சென்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டு, இல்லாத, பொல்லாததை சொல்லி மக்களை குழப்பி தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அதே குழப்பத்தை இந்த தேர்தலிலும் ஏற்படுத்தி வெற்றி பெற அவர்கள் நினைக்கின்றனர்.

    நீங்கள் சொன்ன பதில், வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்றால் இல்லவே இல்லை. எல்லாம் ஒரு நாடகம். அதே நாடகத்தை இப்போதும் அரங்கேற்றி வருகிறார். மக்கள் மனதை குழப்பி, அதை செய்வேன், இதை செய்வேன் என பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் நினைக்கிறார்.

    கடந்த ஆண்டு இந்தியாவிலேயே பெண்கள் வாழ பாதுகாப்பான நகரம் என்று மத்திய அரசு கோவை மாநகரத்தை தேர்வு செய்து அறிவித்தது.

    கோவை மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டம். எனவே இந்த மாவட்டத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரத்தையும் நாங்கள் வழங்கி வருகிறோம். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் தி.மு.க ஆட்சியின் போது ஏற்பட்ட கடும் மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பொருளா தாரத்திலும் பின்னடைவு ஏற்பட்டது.

    அதனை எல்லாம் மாற்றி நாங்கள் மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். மின் மிகை மாநிலமாக இருப்பதால் பல புதிய தொழில்கள் தமிழகத்தை தேடி வருகின்றன. இப்படி சட்டம் ஒழுங்கு மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதில் சிறந்து விளங்கும் நிர்வாக திறமைமிக்க அரசாக எங்களது அரசு உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல் அமைச்சராக பொறுப்பேற்றபோது 100-க்கு 32 பேர் தான் படித்து கொண்டிருந்தனர். தற்போது கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி, அதிகளவில் கல்லூரிகள் திறந்ததன் விளைவாக உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 100-க்கு 49 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    நீர் என்பது முக்கியமானதாகும். நான் முதல்- அமைச்சராக பதவியேற்ற போது கடுமையான வறட்சி. அப்போது கொடிய பிரச்சினை ஏற்பட்டது. அப்படிப்பட்ட பிரச்சினை இனி வரக்கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். அந்த திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரினோம்.

    மழையின் போது பெய்கின்ற தண்ணீர் அனைத்தும் குளங்கள், குட்டைகளில் தேக்கி வைக்கப்பட்டு, இனி அப்படியொரு சூழ்நிலை ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டுள்ளோம்.

    எண்ணற்ற பல திட்டங்களை கோவைக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இங்குள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எங்களையும் பார்ப்பதில்லை. அமைச்சரையும் பார்ப்பதில்லை. மக்களையும் பார்ப்பதில்லை. மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதில்லை.

    கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருஷ்டி மாறி சிங்காநல்லூரில் மட்டும் பல்வேறு தில்லு முல்லுகள், பொய் வாக்குறுதிகள் கொடுத்து, அதன் மூலம் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் எந்தவித திட்டமும் இங்கு கிடைக்கவில்லை. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவர் முதல்-அமைச்சரை பார்ப்பதில்லை. அமைச்சரையும் பார்ப்பதில்லை. மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களையும் எங்களிடம் கொடுப்பதில்லை.

    இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்தவித வேறுபாடும் பார்க்காமல் இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் எனது கவனத்திற்கு கொண்டு நிறைவேற்றி தந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை காளப்பட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. பள்ளி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.

    தி.மு.க. குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு தலைவர் ஸ்டாலின். டைரக்டர்கள் உதயநிதி, கனிமொழி. கடவுளே இல்லை என்றவர், வேலை பிடித்துள்ளார். வேல் பிடித்தால் தான் எதிர்கட்சியாக வர முடியும் என்ற நிலை உள்ளது. தெய்வகுணம் கொண்ட கட்சி அ.தி.மு.க. தெய்வ பக்தி இருப்பதால் தான் அ.தி.மு.க.வை மக்கள் மதிக்கிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றார்கள். வேலை பிடித்த போதே, தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நாடகம் வெளுத்து போய்விட்டது.இவ்வாறு அவர் பேசினார். 

    Next Story
    ×