search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்தில் குடிசைகள் முழுவதும் தீக்கிரையாகி கிடக்கும் காட்சி.
    X
    தீவிபத்தில் குடிசைகள் முழுவதும் தீக்கிரையாகி கிடக்கும் காட்சி.

    திருவள்ளூரில் 5 குடிசை வீடுகள் அடுத்தடுத்து தீப்பிடித்து விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

    திருவள்ளூரில் அடுத்தடுத்து 5 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு அம்சா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் அவரது குடிசை வீட்டில் எதிர்பாராத மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ பலமாக எரிந்ததால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது வேலு வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சுமார் 15 அடிக்கு உயரத்திற்கு மேலே பறந்து கீழே விழுந்தது.

    மேலும் தீயானது அவரது வீட்டில் அருகில் உள்ள அவரது சகோதரர் வீடான பொன்னுரங்கம் (32) என்பவர் வீடு, ரங்கநாதன் (60) மற்றும் சரவணன் (35), அம்சா (55) உள்ளிட்டோர் 4 வீடுகளிலும் மளமளவென பரவியது.

    இதுகுறித்து உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    ஆனாலுல் 5 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து அங்கிருந்த துணிமணிகள், சாமான்கள், பீரோ, கட்டில், டி.வி., 4 சைக்கிள்கள், 2 தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் நாசமாகியது. இந்த தீ விபத்தில் யாரும் காயமின்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதி உதவிகளை வழங்கினர்.
    Next Story
    ×