search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது- ராமதாஸ்

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை எதிர்கொண்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, புகார்களுக்குள்ளான துணை வேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்கத்துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களுக்கு வழியனுப்பு விழா நடத்தப்பட்டு, அவர்களும் வீட்டுக்குச் சென்றடைந்த பிறகு அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து கவர்னர் ஆணையிட்டுள்ளார்.

    சம்பந்தப்பட்ட இரு துணைவேந்தர்களும் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களோ அல்லது அப்பழுக்கற்ற பின்னணி கொண்டவர்களோ அல்ல. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதில் உயர்கல்வித் துறை செயலாளருக்கு துணையாக இருந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு கவர்னர் பணி நீட்டிப்பு வழங்க ஆணையிட்டிருப்பதன் நோக்கம், அவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பதை விட, வரும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வுபெறவிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்க முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வைக்க வேண்டும் என்பது தான். ஊழல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை எதிர்கொண்டு வரும் சூரப்பா, துணைவேந்தர் பதவியில் பணிக்காலத்திற்கு நீடிக்க தகுதியற்றவர் என்பது மட்டுமின்றி, எந்தவொரு துணைவேந்தருக்கும் தன்னிச்சையாக பணி நீட்டிப்பு வழங்குவதற்கான அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

    2017-ம் ஆண்டில் ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், ‘‘துணை வேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்; ஒரு துணைவேந்தர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு விடுவார்’’ என வாக்குறுதி அளித்திருந்தார். அதைப் பின்பற்றாமல் துணை வேந்தர்களுக்கு கவர்னர் தன்னிச்சையாக பணிநீட்டிப்பு வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

    எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுனர் மாளிகை திரும்பப்பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவர் மீதான விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×