search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மஞ்சள் குலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கியதை படத்தில் காணலாம்.
    X
    பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மஞ்சள் குலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கியதை படத்தில் காணலாம்.

    புதுமண தம்பதிகளுக்கு கொடுப்பதற்காக பொங்கல்படி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்பதற்காக, பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
    நெல்லை:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கலுக்கு தேவையான காய்கறிகள், மண்பானைகள், மஞ்சள் குலைகள், கரும்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் போன்றவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் திருமணமான தங்களுடைய மகள் மற்றும் சகோதரிகளுக்கும், தங்கள் வீட்டு புதுமண தம்பதிகளுக்கும் பொங்கல்படி கொடுப்பது வழக்கம்.

    இந்த பொங்கல்படியில் அரிசி, பருப்பு, சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு மற்றும் பானைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கி கொடுப்பர்.

    இந்த பொங்கல்படி கொடுப்பதற்கான பொருட்கள் வாங்குவதற்காக நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளிலும், பாத்திர கடைகளிலும், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பித்தளை பாத்திரங்களையும் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மார்க்கெட்டுக்கு கரும்பு, மஞ்சள் குலை போன்றவற்றை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வரத்தொடங்கினர். தேனியிலிருந்து கரும்பு கட்டுகள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட கரும்பு கட்டுகள் வரத்து குறைவாகவே உள்ளது.நெல்லை பகுதியில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் குலைகளையும் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பொங்கல்படி கொடுக்க செல்பவர்கள் அதிகம் சிரமப்பட்டனர். லோடு ஆட்டோவில் பொங்கல்படி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேன் மற்றும் கார்களில் பொங்கல்படி கொண்டு சென்றனர்.

    புதுமண தம்பதியர்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை) நாளை மறுநாளும் (புதன்கிழமை) பொங்கல்படி அதிகளவில் கொடுப்பார்கள். இதனால் பொங்கல்படி பொருட்கள் விற்பனை களைகட்டியது.

    Next Story
    ×