search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
    X
    நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    நெல்லையில் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    நெல்லையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆசிரியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    நெல்லை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ரமேஷ், தமிழ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.

    அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முதன்மை கல்வி வளாகத்தில் திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல ஆசிரியர்கள் குடை பிடித்துக் கொண்டு நின்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் மீது பழிவாங்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், ஊக்கத்தொகையை ரத்து செய்து வெளியிட்டுள்ள ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி வாழ்த்திப் பேசினார். மாநில துணைத்தலைவர் அக்சீலியா மெர்லின் உஷா பேசினார். முடிவில் மாநில தலைவர் மணிமேகலை கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அமுதா, ஆன்றோ குழந்தை, ராஜேஷ், அந்தோணிசாமி, சரவணன், லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×