search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சபலத்தால் பொங்கல் பரிசுத் தொகை ரூ. 5 லட்சத்தை பறிகொடுத்த ரேஷன் கடை மேற்பார்வையாளர்

    சென்னையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசுத் தொகையை பையில் எடுத்துவந்த ரேஷன் கடை மேற்பார்வையாளர் தனது சபலத்தால் பாலியல் தொழிலாளிகளிடம் 5 லட்ச ரூபாயைப் பறிகொடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த பாஸ்கர் சாஸ்திரிநகரில் உள்ள  இரண்டு ரேஷன்  கடைகளுக்கு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.

    குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகை வழங்க முதல் நாளே 8 லட்ச ரூபாயை வங்கியில் இருந்து எடுத்துக் கைப்பையில் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது பையில் இருந்த பணத்தில் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைப் பணத்தை வழிப்பறிக் கும்பல் பறித்துச் சென்றுவிட்டதாக வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

    அதில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தான் வந்தபோது தன்னை ஆட்டோவில் இருந்த பெண் கடத்திச் சென்று பணத்தைப் பறித்துக்கொண்டு பாரிமுனையில் இறக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    முன்னுக்கு பின் முரணான தகவலாக இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கோயம்பேட்டில் இருந்து பாஸ்கரைக் கடத்திச் சென்றதாகக் கூறிய இடத்திலும், பாரிமுனையில் இறக்கிவிட்டதாகக் கூறிய இடத்திலும் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததில் அவர் தானாகவே சென்றதும், ஏடிஎம் மையத்துக்குச் சென்று வந்ததும் தெரிந்ததால் அவரிடம் தீர விசாரித்தனர்.

    விசாரணையில், பாஸ்கர் கோயம்பேட்டில் இருந்து பாலியல் தொழிலாளிகள் இரண்டு பேருடன் ஆட்டோவில் சென்றதையும், இரவில் பாரிமுனை பகுதியில் தங்கிவிட்டு, இறுதியாக ஏடிஎம் மையத்தில் அவர்களுக்குப் பணம் எடுத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்பியதையும் ஒப்புக்கொண்டார்.

    வீடு திரும்பியதும் கைப்பையைப் பார்த்தபோது அதில் வைத்திருந்த பணத்தில் 5.15 லட்சத்தைப் பாலியல் தொழிலாளிகள் இருவரும் திருடிச் சென்றது தெரியவந்ததாகக் கூறினார். இதையடுத்துப் பணத்தை எடுத்துச் சென்ற பெண்கள் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    இதனிடையே மக்களுக்குப் பொங்கல்பரிசாக வழங்க வேண்டிய பணம் பறிபோனதால், கோயம்பேடு சாஸ்திரிநகரில் உள்ள இரண்டு ரேஷ்ன் கடைகளும் இன்று மூடப்பட்டன. டோக்கன்களுடன் வந்து நெடுநேரமாக வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    Next Story
    ×