search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    பொங்கல் பண்டிகை முன்பதிவு: தென்மாவட்ட ரெயில்கள் நிரம்பின

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்ட ரெயில்களில் அனைத்து இடங்கள் நிரம்பி விட்டதால் ஓரிரு நாட்களில் சிறப்புரெயில்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து 4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை நாட்களாக வருகின்றன.

    இதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட முன்பதிவு செய்தனர்.

    கொரோனா பாதிப்புள்ள இத்தகைய சூழலில் ரெயில்களில் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும். சாதாரண முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் இதுவரையில் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    காத்திருப்போர் பட்டியலில் அதிகளவு டிக்கெட் வழங்குவது இல்லை. பயணம் உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே செல்லக்கூடிய நிலை உள்ளது.

    இந்தநிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை,செங்கோட்டை, ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன. 12 மற்றும் 13-ந் தேதி பயணம் செய்ய இடங்கள் இல்லை. அனைத்து ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    திருச்செந்தூர், தஞ்சாவூர் செல்லக்கூடிய ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. பொதுவாக அனைத்து ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 200 வரை உள்ளன.

    இதுதவிர சென்னையில் இருந்து கோவை செல்லக் கூடிய சேரன், நீலகிரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. முதல் வகுப்புமற்றும் 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கைகள் மட்டும் ஒர சில இடங்கள் காலியாக உள்ளன.

    மேலும் சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூர், மைசூர், டெல்லி, மும்பை செல்லும் ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலானவர்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்து வருகின்றனர்.

    பகல் நேரங்களில் செல்லக்கூடிய கோவை இன்டர்சிட்டி, மதுரை வைகை போன்ற ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. மதுரை செல்லும் தேஜாஸ் ரெயிலில் மட்டும் இடங்கள் காலியாக இருக்கின்றன.

    பெரும்பாலான ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் ஓரிரு நாட்களில் சிறப்புரெயில்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்தெந்த ரெயில் களில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து சிறப்பு ரெயில் விரைவில் விடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×