search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஊழல் புகார்கள் குறித்து விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா? எடப்பாடி பழனிசாமிக்கு முக ஸ்டாலின் சவால்

    உங்கள் மீதான விசாரணைக்கு அனுமதி அளித்துவிட்டு, ஊழல் புகார்கள் குறித்து விவாதிக்க வாருங்கள். நான் ரெடி, நீங்கள் ரெடியா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்குப்போன முதல்-அமைச்சரை கொண்ட கட்சி, ஊழலுக்காக முதல்-அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாத ஊழல் கறை படிந்த கட்சி அ.தி.மு.க.தான். அந்த கட்சியின் சார்பில் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்தான். அது பற்றி எந்த கூச்சமும் இல்லாமல், ‘நான் ஊழலே செய்யவில்லை’ என முழுப் பூசணிக்காயை அவர் இலை சோற்றில் மறைக்க முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாங்கள் எங்கே ஊழல் செய்தோம்? என்று கேட்கிறார், எடப்பாடி பழனிசாமி. ஒரு சிலவற்றை மட்டும் பட்டியலிட வேண்டுமென்றால் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் ஊழல், ஆவின் பாலில் ஊழல், ரேஷன் அரிசியில் ஊழல், மணலில் ஊழல், ப்ளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்குவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா டெண்டர் ஊழல், அமைச்சர்களும் முதல்-அமைச்சரும் போட்டி போட்டுக்கொண்டு உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், பாரத்நெட் டெண்டர் ஊழல், உயிர்காக்கும் கொரோனா தடுப்புக்கருவிகள், மருந்துகள் வாங்குவதில் ஊழல், ‘காக்னிசெண்ட் டெக்னாலஜி' கம்பெனிக்கு ‘பிளானிங் பெர்மிஷன்' கொடுப்பதற்கு அமெரிக்க டாலரில் ஊழல், குட்கா ஊழல், ‘வாக்கி டாக்கி' ஊழல், ‘எல்.இ.டி.' விளக்கு ஊழல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களில் ஊழல், மின்நிலையம் கட்டுமான பணிகளில் ஊழல் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் உள்ள ஊழல் நாற்றம் உலகம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது.

    என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்க தயாரா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்க தயார்.

    அதற்கு முன்னர் பழனிசாமி சில நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, ‘சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்' என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் (மு.க.ஸ்டாலின்), அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி தமிழக கவர்னரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.

    அதே மாதிரி வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று தமிழக கவர்னருக்கு கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே விவாதத்திற்கு தேதி குறியுங்கள், எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ.பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம்.

    அரசு கஜானாவில் 10 ஆண்டு கால ஆட்சியில் குறிப்பாக 4 ஆண்டு கால உங்களது ஆட்சியில் எப்படி கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள், என்ன ‘கமிஷன்’ வாங்கி உள்ளீர்கள், என்ன ‘கலெக்‌ஷன்’ செய்துள்ளீர்கள், எப்படிப்பட்ட ‘கரெப்ஷன்’ செய்துள்ளீர்கள் என்பதை கிழித்து தோரணமாகத் தொங்க விடுகிறேன். நான் ரெடி, நீங்கள் ரெடியா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×