search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ரெயில்வேக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

    2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ரெயில்வேக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சென்னை:

    இந்திய ரெயில்வேயில் 13 ஆயிரத்து 349 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் 400-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

    சென்னை, மும்பை, கொல்கத்தாவில் மின்சார ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பயணிகளுக்கான ரெயில் சேவை முழுமையாக தொடங்கவில்லை.

    கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் ரெயில் பயணங்களை பொது மக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக ரெயில்வேக்கு இதுவரை இல்லாத வகையில் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு ரெயில்வேதுறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. இதில் பயணிகள் பிரிவில் மட்டும் ரூ.38 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டில் ரெயில்வேயின் வருவாய் ரூ.88 ஆயிரத்து 250 கோடி ஆகும். முந்தைய ஆண்டை விட 2020-ம் ஆண்டு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 31 சதவீதம் இழப்பாகும். பயணிகள் பிரிவில் ரூ.6,033 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது 84 சதவீதம் வருவாய் இழப்பாகும்.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    ரெயில்வேயில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து வசதியை அதிகரித்து மேம்படுத்தும் வகையில் வர்த்தக மேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சரக்குகள் கையாள்வதை அதிகரிப்பது, தேவையான வழித் தடங்களுக்கு பிரத்தியேக சரக்கு ரெயில்களை இயக்குவது, துறைமுகங்களை இணைக்கும் வகையில் ரெயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்துவது, விரைவு ரெயில்களில் தேவையான அளவுக்கு பார்சல் பெட்டிகளை இணைப்பது, கட்டண சலுகைகள் போன்ற பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் ரெயில்வேக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக சரக்கு ரெயில் பிரிவில் வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×