search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரும்பு சர்க்கரை உற்பத்திக்காக சர்க்கரைப்பாகை கிளறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
    X
    கரும்பு சர்க்கரை உற்பத்திக்காக சர்க்கரைப்பாகை கிளறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    உற்பத்தி செலவு அதிகரிப்பு எதிரொலி- அச்சுவெல்லம் உற்பத்தி முடங்கியது

    உற்பத்தி செலவு அதிகரிப்பால் அச்சுவெல்லம் உற்பத்தி உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் முடங்கியுள்ளது. கரும்பு சர்க்கரைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது.
    போடிப்பட்டி:

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் விளையும் கரும்புகளை நம்பி வேடப்பட்டி, சாமராயப்பட்டி, போடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வெல்ல உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் ஆண்டு் பயிரான கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறையத்தொடங்கியது.

    நீண்ட காலப்பயிர்களை விட குறுகிய காலப்பயிர்கள் சாகுபடியில் அதிக வருமானம் கிடைத்தது இதற்கு ஒரு காரணமாகும். அதேநேரத்தில் கரும்புக்கு உரிய விலை கிடைக்காததே கரும்பு சாகுபடியைக் கைவிடுவதற்கான முக்கிய காரணமாகும். இவ்வாறு கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததால் வெல்ல உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூரில் போதிய அளவில் கரும்பு கிடைக்காத நிலையில் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து கரும்பு வாங்கி வந்து வெல்ல உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். ஆனால் வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்காததால் உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக பொங்கல் என்றாலே நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு, மஞ்சள் ஆகியவையாகும். சர்க்கரை பொங்கல் தயாரிப்புக்கு வெல்லம் தேவை என்பதால் பொங்கல் சமயத்தில் அதிக அளவில் வெல்லம் விற்பனையாகும். இதனால் தேவை அதிகரிப்பதுடன் நல்ல விலையும் கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு ஒருசில மாதங்களுக்கு முன்பிருந்தே வெல்லம் உற்பத்தி செய்து இருப்பு வைக்கத் தொடங்கி விடுவர். மேலும் இரவு- பகலாக வெல்ல உற்பத்தி நடைபெறும். ஆனால் நடப்பு ஆண்டில் பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் உடுமலை பகுதியில் பெரும்பாலான அச்சு வெல்ல ஆலைகள் இயங்காமல் முடங்கியுள்ளன.

    இதனால் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாமல், வெல்ல உற்பத்தியை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களும் வேலையிழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது நமது பகுதியில் கரும்பு அறுவடை எதுவும் நடைபெறவில்லை. இதனால் முழுவதுமாக வெளி மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து கரும்பு வாங்கி லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரும்போது ஒரு டன்னுக்கு ரூ.4,200 வரை அசல் ஆகிறது. இதில் நல்ல பிழிதிறன் உள்ள கரும்பாக இருந்தால் ஒரு கொப்பரைக்கு 1 ½ டன் கரும்பின் சாறு போதுமானது. சில வேளைகளில் ஒரு கொப்பரைக்கு 2 டன் கரும்பு வரை தேவைப்படுகிறது. அச்சு வெல்ல உற்பத்தி செய்யும்போது ஒரு கொப்பரைக்கு 30 கிலோ கொண்ட 7 சிப்பங்கள் வெல்லம் உற்பத்தி செய்யலாம். இங்கு உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லம் நெய்க்காரப்பட்டி, பொள்ளாச்சி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போதைய நிலையில் ஒரு சிப்பம் அச்சு வெல்லம் ரூ.1000 முதல் ரூ.1,200 வரையே விற்பனையாகிறது. அதிலும் சில வேளைகளில் கொண்டு போன வெல்லத்தை வாங்குவதற்கு ஆளில்லாத நிலையும் ஏற்படுகிறது. இதனால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே வேறு வழியில்லாமல் அச்சு வெல்ல உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் கேரளா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மண்டை வெல்லம் எனப்படும் உருண்டை வெல்லத்தின் பயன்பாடு ஓரளவு இருக்கிறது. இதனால் ஒரு சில வெல்ல உற்பத்தியாளர்கள் உருண்டை வெல்லம் உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால் குறைந்த விலைக்கே விற்பனையாவதால் பெரிய அளவில் லாபம் கிடைக்காத நிலையே உள்ளது. தற்போதைய நிலையில் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு கைகொடுப்பது நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்பு சர்க்கரை உற்பத்தியேயாகும்.

    சமீப காலங்களாக பொதுமக்களிடையே வெள்ளை சர்க்கரை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு சர்க்கரையின் பயன்பாடு சற்று அதிகரித்துள்ளது. அதிலும் ரசாயனங்கள் கலப்பில்லாத சுத்தமான கரும்பு சர்க்கரைக்கு மவுசு கூடியுள்ளது.

    இதனால் கரும்பு சர்க்கரை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். இதுதவிர கரும்புச்சாறிலிருந்து தேன்பாகு உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறோம். இவற்றை சில்லரை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக ஆலைகளுக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் சுத்தமான கரும்பு சர்க்கரை உற்பத்தி ஓரளவு கைகொடுக்கிறது.

    இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

    பொங்கல் நெருங்கி வரும் வேளையிலும் அச்சு வெல்ல உற்பத்தி முடங்கியுள்ள நிலை இந்த தொழிலின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்புகிறது.
    Next Story
    ×