search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நகைப்பட்டறையில் 2½ கிலோ நகை வாங்கி மோசடி செய்த வியாபாரி கைது

    சென்னை நகைப்பட்டறையில் 2½ கிலோ நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த நகை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சுப்பிரதா ஜனா(வயது 45). சவுகார்பேட்டையில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு நகைகள் செய்து வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம்.

    மதுரையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான அய்யனார் (50) என்பவர் சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைகளில் தங்க நகைகளை வாங்கிச்சென்று விற்பது பழக்கம். இதனால் அவருக்கு இங்குள்ள நகை பட்டறைகளில் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அய்யனார், சுப்பிரதா ஜனாவின் நகைப்பட்டறையில் இருந்து சுமார் 2½ கிலோ தங்க நகைகளை வாங்கிச் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர், நகைக்கு உண்டான பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். சுப்பிரதா ஜனா போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

    இ்ந்த மோசடி குறித்து யானைக்கவுனி போலீசில் சுப்பிரதா ஜனா புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சென்று நகை வியாபாரி அய்யனாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

    அதில் 2½ கிலோ நகையை வாங்கி மோசடி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மோசடி செய்த நகையின் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×