search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி கைது"

    • வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.
    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முக பிரியன் (வயது 28).

    இவர் நேற்று பகல் முழுவதும் சேலாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். மாலையில் பணியை முடித்து விட்டு, அங்கிருந்து குன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. இதனை பார்த்த சண்முகபிரியன், தனது மோட்டார் சைக்கிளை திருப்பி, வேகமாக சென்ற காரினை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    காரில் இருந்தவரிடம் அதிவேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை வேகமாக இயக்கி செல்கிறீர்கள் என கேட்டார்.

    ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சண்முகபிரியன் கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலாஸ் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(38) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பூ மற்றும் பழக்கடை நடத்தி வந்துள்ளார்.

    மேலும் இவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததும், தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அப்துல் காதர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது, கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் விசாரணை
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன் (வயது 27).

    இவர் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை 3 சக்கர ஆட்டோ மூலம் விற்பனை செய்து வருகிறார். இவர் சுற்று வட்டாரம் மளிகை கடைகளுக்கும் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை செய்வதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    ரகசிய தகவலின் பெயரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் ரகசியமாக கண்காணித்தனர்.இதையறிந்த தலைமறைவாக மோகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து குட்கா விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 3 சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைதான மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • நான் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தேன்.
    • வேல்முருகன் எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்தார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    நேற்று அவர் தோட்டத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு மொபட்டில் வந்த ஒரு நபர் அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் ஆத்திரம் தீராத அந்த நபர் வேல்முருகனின் தலையை அரிவாளால் துண்டித்து சாக்கு மூட்டையில் தலையை போட்டு கட்டி தனது மொபட்டில் எடுத்துச்சென்றார்.

    இதுகுறித்து ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேல்முருகன் தலையை தேடிவந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் இசக்கியம்மாள் என்பவரது வீட்டின் முன் வேல்முருகனின் தலை கிடந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

    தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இசக்கியம்மாளின் கணவரான ஆலங்குளம் அருகே உள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த இளநீர் வியாபாரியான வேல்சாமி(37) என்பவர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் வேல்சாமி கூறியதாவது:-

    எனக்கும், எனது மனைவிக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிகுளத்தில் வசித்து வந்தேன்.

    அப்போது எனது மாடுகள் வேல்முருகனின் தோட்டத்தில் மேய்ந்து விட்டதாக எனக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் நான் கயத்தாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விட்டேன். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் மீண்டும் கண்ணாடிகுளத்தில் குடியேறினேன்.

    பின்னர் வேல்முருகன் எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்தார். இதனால் அவர்கள் 2 பேரையும் குறித்து நான் சந்தேகம் அடைந்தேன். இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் அவர் என்னை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான், எனது மனைவியை பிரிந்ததற்கு வேல்முருகன் தான் காரணம் என்று எண்ணினேன். இதனால் அவரை நேற்று வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார்.
    • போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் இஸ்மாயில் (31). இவரது கடைக்கு நேற்று மாலை கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார். அப்போது கடையில் இருந்த இஸ்மாயிலிடம் குட்கா எத்தனை பண்டல் வேண்டும் என கேட்டார். அதற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து லிங்கராஜ் தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், இஸ்மாயிலை தாக்கினார்.

    இது குறித்து இஸ்மாயில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், பெரிய தச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரிகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    • பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சினார்.
    • டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சியபோது டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய பிரபு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கெங்கவல்லி அருகே நடுவலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த பிரபுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    இதை பார்த்ததும் அவர்களை தள்ளி விட்டு பிரபு ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.

    • விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார்.
    • சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது.

    இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார். அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர்.

    இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது. இது காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவின் அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சிறுவல்லூர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூபன்சாலை பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது .

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாசு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • கடையில் 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மூங்கில்பாளையம் வின்டெக்ஸ் நகரில் துரைசிங் (31) என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது.

    இந்த கடையில் அரசால் தடைசெய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வியாபாரி துரைசிங்கை கைது செய்தனர். மேலும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    • வியாபாரி மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் அவரை ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று திருகண்டலம் ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் செல்லப்பா(வயது58) என்பது தெரியவந்தது. இவர் தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.

    எனவே, அவர் பையில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்களுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல்முருகன் (வயது 28). இவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை வெற்றிவேல் முருகன் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால், போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

    அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரியாக தாக்கி, வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கணவரின் சித்ரவதை தாங்காமல் அந்த சிறுமி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர்.

    அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன. அதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல் முருகன் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். சிறுமி சித்ரவதைக்கு உள்ளானது குறித்த புகாரின்பேரில் வெற்றிவேல் முருகன் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

    தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் முருகன் மதுரை அண்ணாநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

    பின்பு வீட்டுக்குள் இருந்த வெற்றிவேல் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயி. இவர் சங்கராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்தார். அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை மொத்தமாக தஞ்சை மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்தார். அதற்குண்டான பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.

    சம்பவத்தன்று சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் ஆனந்த் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வந்த போது போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதிகளில் விவசாயிகளிடம் சுமார் 8000 நெல் மற்றும் எள் மூட்டைகள் கொள்முதல் செய்து அதற்குண்டான பணம் சுமார் ரூ.62,64,628 தராமல் ஏமாற்றி வந்தது தெரியவருகிறது. மேலும் அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி விட்டுள்ளனர். இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதே போன்று விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரி யவருகிறது. போலீசார் ஆனந்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×