search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் அருவி
    X
    குற்றாலம் அருவி

    தொடர் விடுமுறை- குற்றாலம் அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்

    தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் குற்றாலத்தில் வியாபாரமும் களைகட்ட தொடங்கி உள்ளது.
    தென்காசி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில் 9 மாதங்களுக்கு பின்னர் கடந்த 15-ந் தேதி முதல் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து குற்றாலம் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

    இதையடுத்து கடந்த 15-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்து வருகிறார்கள். மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர்.

    பரவலான மழை காரணமாக தற்போது அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக நேற்று குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இன்றும் அதிகாலை முதலே ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். அதேபோல் மண்டல பூஜையையொட்டி கடந்த 15-ந் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்களும் குளித்து செல்கிறார்கள்.

    பேரூராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட குழுக்கள் சுற்றுலா பயணிகளை ஒழுங்குபடுத்தி, சமூக இடைவெளியை பின்பற்றி குளிக்க அனுமதித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக குளித்து செல்ல பேரூராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. எனினும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து செல்கின்றனர்.

    நாளை (ஞாயிற்றுகிழமை) என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் குற்றாலத்தில் வியாபாரமும் களைகட்ட தொடங்கி உள்ளது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை தூறியது. 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர் இன்று 142.25 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை 150.33 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை 110.90 அடியாகவும் உள்ளது.

    இதே போல தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

    85 அடி உயரம் கொண்ட கடனா அணை 83 அடியாகவும் 84 அடி உயரம் கொண்ட ராமநதி 80.50 அடியாகவும், 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி 65.29 அடியாகவும், 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை 80 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×