search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ராமேசுவரம் மீனவர்கள் 29 பேருக்கு இலங்கையில் கொரோனா பரிசோதனை

    இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 29 பேருக்கு இலங்கையில் கொரோனா பரிசோதனை நடந்தது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும், விரட்டியடித்தும் தாக்குதல் நடத்தினர்.

    மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 29 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்்தனர். இதில் 3 விசைப்படகுகள் மற்றும் 22 மீனவர்களை இலங்கையில் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    29 மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வரும் வரையிலும் 29 பேரையும் கடற்படை முகாமிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்பே 29 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்களா அல்லது எச்சரிக்கை செய்து மீண்டும் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்களா? என்பது குறித்து தெரியவரும்.

    இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 29 பேரையும், 4 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா எமரிட், சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகள், 29 மீனவர்களையும் உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படும் வரையிலும் நாளை (அதாவது இன்று) முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதே நேரம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சிறிய விசைப்படகுகள் கலந்து கொள்ளாது எனவும், ராமேசுவரத்தில் உள்ள சிறிய விசைப்படகுகள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லும் என்றும் மீனவ சங்க தலைவர் போஸ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×