search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மசாஜ் சென்டரில் விபசாரம்- ‘டிக்-டாக்’ சூர்யா உள்பட 10 பேர் கைது

    திருச்சியில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய ‘டிக்-டாக்’ சூர்யா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட 12 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வருபவர்கள், இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக ஸ்பா சென்டர் குறித்த எவ்வித புகாரும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள காம்ப்ளக்சில் சன் ஸ்பா என்ற பெயரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட தொடங்கியது. இந்த மசாஜ் சென்டரிலும் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, அதிரடியாக மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளர் ‘டிக்டாக்’ கில் பிரபலமான சூர்யா (வயது 34) என்ற பெண், அவருக்கு உதவியாக இருந்த தினேஷ் (25) ஆகிய இருவரையும் கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல தில்லைநகர் பகுதியில் குப்தா ஸ்பா, வேதா ஸ்பா, ஆர்ச்சிட் ஸ்பா ஆகிய மசாஜ் சென்டர்களிலும், உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள உனா ஸ்பா என்ற மசாஜ் சென்டரிலும் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் 25 வயதுக்குட்பட்ட இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது.

    அதைத்தொடர்ந்து உல்லாசம் அனுபவிக்க வந்த 8 ஆண்களை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் 12 பேரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட 10 பேரும் நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். விபசார விடுதிபோல செயல்பட்ட மசாஜ் சென்டர்களை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    திருச்சி நகரில் இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக போலியான ஸ்பா என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீதும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    Next Story
    ×