search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை பெய்து 2 நாட்கள் ஆகியும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும் காட்சி.
    X
    கனமழை பெய்து 2 நாட்கள் ஆகியும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும் காட்சி.

    ஏரியாக மாறிய விழுப்புரம் புதிய பஸ்நிலையம்- மக்கள் அவதி

    விழுப்புரம் பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பஸ் நிலையம் ஏரியாக மாறி இருக்கிறது. பஸ்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
    விழுப்புரம்:

    வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி-விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் இடையே கரையை கடந்து சென்றது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழைநீர் தேங்கியது. இதற்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையமும் விதிவிலக்கல்ல. சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்காத பஸ் நிலையம், புயல் மழையால் ஏரி போல் மாறி இருக்கிறது. 3 அடிக்கும் மேல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    மழை ஓய்ந்தும் இன்னும் தேங்கிய நீர் வடிந்தபாடில்லை. காரணம் விழுப்புரம் சுதாகர் நகர் பகுதி வழியாக செல்லக்கூடிய வாய்க்கால் தூர்வாரப்படாமலும், பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியின் இருப்பதாலும் தண்ணீர் செல்ல வழியில்லை. நகராட்சி நிர்வாகமும், பஸ் நிலையத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

    இதற்கிடையே புயல் எச்சரிக்கையால் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கியது. பஸ் நிலையம் ஏரியாக மாறிவிட்டதால், பஸ்கள் அனைத்தும் உள்ளே செல்லாமல், நுழைவு வாயில் பகுதியில் சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதிகாரிகள் யாரும் தண்ணீரை வெளியேற்ற முன்வராததால், நேற்றும் இதே நிலை தான் நீடித்தது. இதன் காரணமாக, பஸ் நிலையம் முன்புள்ள சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மின் மோட்டார்கள் மூலம் பஸ் நிலையத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 100 எச்.பி. திறன் கொண்ட 2 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை, பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அங்குள்ள வெள்ளநீர் வெளியேற்றும் கிணற்றுக்குள் கொண்டு சென்று அங்கிருந்து ‘பம்பிங்’ செய்யப்பட்டு பின்னர் விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள வாய்க்கால் வழியாக சாலாமேடு ஏரிக்கு திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பல மணி நேரத்திற்கு பிறகே பஸ் நிலையத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது.
    Next Story
    ×