search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் முககவசங்கள் தேக்கமடைந்துள்ளதை காணலாம்.
    X
    திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் முககவசங்கள் தேக்கமடைந்துள்ளதை காணலாம்.

    திருப்பூரில் பல கோடி மதிப்பிலான முககவசங்கள் தேக்கம்

    கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால், திருப்பூரில் பல கோடி மதிப்பிலான முககவசங்கள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை விற்பனை செய்ய முடியாததால் முககவச தயாரிப்பாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    உலகம் முழுவதும் கொரோனா பரவியது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    தமிழகத்தை பொறுத்தவரை வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து தொழில்களும் சரிவையே சந்தித்தன. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பின்னலாடை தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னலாடை நிறுவனங்களை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

    இதன் பின்னர் தொழில்துறையினர் கோரிக்கையை ஏற்று மே மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு, அரசு வழிமுறைகளுடன் செயல்பட்டன. அப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.

    இதனால் இதனை கையில் எடுத்த திருப்பூர் தொழில்துறையினர் முககவசங்களை தயார் செய்து வர்த்தகம் செய்ய தொடங்கினர். அனைத்து நிறுவனங்களிலும் முககவசம் தயாரிப்பு பிரதானமாக இருந்தது. இதனால் நாள் ஒன்றுக்கு திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு லட்சக்கணக்கான முககவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், ஆர்டர்களும் குவிந்தன.

    இந்த ஆர்டர்கள் மூலம் நிறுவனங்கள் மூடப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவிற்கு சில நிறுவனங்கள் ஈடுகட்டின. இதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறையவில்லை. அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களின் திறன் மற்றும் நிதி நிலைக்கு ஏற்ற வகையில் முககவசங்களை அதிகளவு தயார் செய்து இருப்புவைத்தன. ஆர்டர்கள் வந்தவுடன் அவற்றை உடனே அனுப்ப வேண்டும் என கூடுதலாகவும் முககவசங்களை தயாரித்து வைத்தன.

    இருப்பினும் திருப்பூரில் நிறுவனங்கள் அதிகம் என்பதால், முககவச ஆர்டர்களுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டது. ஏராளமான தரங்களில் முககவசங்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் பல கோடி மதிப்பிலான முககவசங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

    இது குறித்து முககவச தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் என பல பகுதிகளில் இருந்தும் திருப்பூருக்கு முககவச ஆர்டர்கள் வந்தது. முதலில் முககவசங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்களே தயார் செய்தன. இதனால் போட்டி குறைவாக இருந்தது. இதன் பின்னர் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து பல நிறுவனங்கள் முககவச தயாரிப்பில் கவனம் செலுத்தின. அதிகளவு முககவசங்களை தயாரித்து நிறுவனங்களில் இருப்பும் வைத்தன.

    தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதுபோல் ஏராளமானவர்கள் முககவசங்களை தயார் செய்துள்ளதால், மக்களிடம் விலை குறைவான முககவசங்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் சற்று விலை அதிகமாக உள்ள முககவசங்களில், விலைக்கு ஏற்ப அதன் தரம் இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விலை குறைவாக இருக்கிற முககவசங்களையே வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    குறைந்தபட்சம் ரூ.15 என நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்ற தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள முககவசங்கள் பல விற்பனையாகாமல் இருக்கிறது. இவற்றை ரூ.8-க்கு வியாபாரிகள் கேட்டு வருகிறார்கள். இவ்வாறாக திருப்பூரில் பல தொழில்துறையினர் தயாரித்து வைத்துள்ள முககவசங்கள் பல கோடிக்கு நிறுவனங்களில் தேக்கமடைந்துள்ளன.

    இவற்றை விற்பனை செய்ய முடியாமல் தொழில்துறையினர் பலர் அவதியடைந்து வருகிறோம். மேலும், தற்போது ஊரடங்கு தளர்வுகளும் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வருவதால், கடந்த காலங்களை போல் பொதுமக்களும் முககவசங்கள் அணிய ஆர்வம் காட்டுவதில்லை. இதுவும் முககவசம் விற்பனை சரிவிற்கு ஒரு முக்கிய காரணம். ஆடைகள் தேக்கமடைந்தால் கூட அவற்றை விற்பனை செய்து விடலாம். ஆனால் முககவசங்களை அவ்வாறு செய்ய முடியாது. எனவே இந்த இழப்பை எவ்வாறு சரி செய்வோம் என கவலையில் உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×