search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆதிதிராவிடர்கள் தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி

    திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் தொழில் செய்ய மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    திருச்சி:

    இந்து ஆதிதிராவிட ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தில் நலிவுற்ற ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தில் திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டம், நிலம் வாங்கும் திட்டம், சுயஉதவித் திட்டம், துரித மின்இணைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்களை பெற விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும் இருப்பதுடன் 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் திட்டம் சொத்தினை உருவாக்கக் கூடியதாகவும், கடனை திருப்பி செலுத்தத்தக்க வகையில் போதிய வருமானத்தினை வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    மேலும் திட்டத் தொகை குறைந்த பட்சம் ரூ.1½ லட்சம் முதல் அதிகபட்ச உச்ச வரம்பு ரூ.7½ லட்சம் வரை இருப்பதுடன் விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருத்தல் கூடாது. மொத்த கடன் தொகையில், 30 சதவீதம் மானியமாக குறைந்த பட்சமாக ரூ.45 ஆயிரம் அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் வரை தொழில் கடனுக்கான மானியம் வழங்கப்படுகிறது.

    மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலுக்கும், மருத்துவம் சார்ந்த தொழில், பெண்களுக்கு நிலம் வாங்குதல், சுயஉதவி குழுக்கடன் போன்றவற்றிற்கு மானியம் மற்றும் கடன் வழங்கப்படுகிறது.

    திருச்சி மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் 2020-21-ம் நிதியாண்டில் 64 பயனாளிகளுக்கு ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தாட்கோவின் அனைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தாட்கோ இணைதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×