search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    நகை பட்டறையில் 107 பவுன் தங்க சங்கிலிகள் திருட்டு

    சென்னை கிண்டியில் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறையில் 107 பவுன் தங்க சங்கிலிகள் திருடுபோனது. இதுதொடர்பாக தங்க நகைகள் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள் பட்டறையில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஆர்டர்கள் அதிகமாக இருந்ததால் கடந்த 25 நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நகை தயாரிக்கும் ஊழியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

    இந்த நிலையில் பட்டறையில் வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சமீபத்தில் வேலைக்கு வந்த சர்பின் (வயது 23), ஷேக் (24), பிரசாந்த் (24), ரிபாத் (24) ஆகிய 4 பேர் மட்டும் பணிக்கு வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பட்டறை நிர்வாகிகள் 4 பேரை தேடினர். அப்போது ஊழியர்கள் தங்கியிருந்த பட்டறையில் 2-வது மாடியின் உள்ள சிமெண்டு ஓடுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் 4 பேரும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் சங்தேகம் அடைந்த பட்டறை நிர்வாகிகள் நகைகளை சோதித்து பார்த்தபோது, தங்க சங்கிலிகளில் 852 கிராம் எடை கொண்ட 107 பவுன் தங்க சங்கிலிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதை 4 பேரும் திருடிச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பட்டறை நிர்வாகி கமலேஷ் கிண்டி போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பட்டறையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கொல்கத்தா செல்லும் ரெயில் மற்றும் விமானங்களில் 4 பேரும் தப்பிச்செல்லாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தியுள்ளனர்.
    Next Story
    ×