search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    ராமேசுவரத்தில் ஏன் விமானநிலையம் அமைக்கக்கூடாது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

    ராமேசுவரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
    மதுரை:

    சிவகங்கையை சேர்ந்த ரமேஷ் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுலா தலம் ஆகும். இங்கு குலசேகர பாண்டிய மன்னன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், செட்டிநாடு அரண்மனை, உலகப் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப மையமான சிக்ரி போன்றவை உள்ளன. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பொருட்கள், உணவுப்பொருட்கள் உலகெங்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஏற்கனவே 2-ம் உலகப்போர் சமயத்தில் செட்டிநாடு பகுதியில் ஒரு விமான நிலையம் இருந்துள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் விமான ஓடுதளமும், அதற்குரிய வசதிகளும் தற்போதும் உள்ளன. மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் 13 இடங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் காரைக்குடி செட்டிநாடு பகுதியில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்தி விமான நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்குடி ஒரு புகழ்பெற்ற தலமாக இருக்கிறது. இதன் அருகில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேசுவரம், கடைக்கோடி நகரமாகவும், சிவலிங்க ஸ்தலமாகவும் உள்ளது. எனவே ராமேசுவரம் பகுதியில் ஒரு விமான நிலையத்தை ஏன் அமைக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×